Site icon Metro People

காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் திடீர் பல்டி அடித்த தாலிபான்கள்!

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம், இந்தியாவுடன் சுமூகமாக உறவையே வேண்டுகிறோம் என தாலிபான்கள் முன்னர் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என தாலிபான்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டிலிருந்து பல்டி அடித்து, காஷ்மீர் விவகாரம் குறித்து பேச எங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி தாலிபான்கள் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தோஹாவில் உள்ள தாலிபான் அரசியல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாகீன் பிபிசி உருது-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்காக பேசுவதற்கு தாலிபான்களுக்கு உரிமை இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “இஸ்லாமியராக இருப்பதால் காஷ்மீரிலோ, இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காகவோ குரல் கொடுப்பதற்கு தாலிபான்களுக்கு உரிமை உள்ளது.” என குறிப்பிட்டார். அதே நேரத்தில் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதமேந்தி போராடும் கொள்கை எங்களுக்கு கிடையாது என்றும் தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாகீன் தெரிவித்தார்.

முன்னதாக சி.என்.என் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தாலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம், இந்தியாவுடன் சுமூகமாக உறவையே வேண்டுகிறோம் என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள், உலக நாடுகளுடன் உறவை பேணுவதில் அக்கறை கொண்டிருப்பதாக காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் தங்களின் நட்பை பலப்படுத்துவதில் அக்கறை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.. அந்த வகையில் தாலிபான்கள் வேண்டுகோளை ஏற்று கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாலிபான் பிரதிநிதியை வரவழைத்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது மத்திய அரசு.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கன் மண்ணை தீவிரவாதத்துக்காகவும், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது என இந்தியா தனது நிலைப்பாட்டை தாலிபான்களிடம் எடுத்துரைத்திருக்கிறது.

Exit mobile version