Site icon Metro People

அரசுப் பணி தேர்வுகளுக்கு தமிழ் மொழித் தாள் கட்டாயம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மை துறை செயலர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணை:

அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, அனைத்துவித போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வாகநடத்தப்படும் என்று பேரவையில்நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த செப்.13-ம் தேதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர் வழங்கிய கருத்துருவின் அடிப்படையில், அனைத்து தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் தகுதித் தேர்வை கட்டாயமாக்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம்பெறும். அதற்கான பாடத் திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறவேண்டும்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய இரு நிலைகள் கொண்ட தேர்வுகளில், விரித்துரைக்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும். குரூப்-3, குரூப்-4 தேர்வுகளில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு, பொது தமிழ் மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும்.

அதேபோல, ஆசிரியர் தேர்வுவாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட பிற தேர்வு முகமைகள் நடத்தும் அனைத்துவித போட்டித் தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர்கள் எளிதில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

Exit mobile version