Site icon Metro People

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிக்கப்பட இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால், சிலர் இவ்வகை விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலைகள் நிகழ்ந்து வந்தபோதிலும் தற்போது, அது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய பணம் இழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

அந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இக்குழுவினர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்க உள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version