Site icon Metro People

நகைக்கடன் தள்ளுபடியில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது: டிடிவி தினகரன் கண்டனம்

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடியில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்றைய தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறுகையில், ”தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version