Site icon Metro People

‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை’ – அமைச்சர் சேகர்பாபு

“பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை. ஒன்றிய அரசு கூட ஒப்பிட்டாலும் தமிழகமே இதில் சிறந்து விளங்குகிறது” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னையில் இன்று காலை மருத்துவ முகாமை பார்வையிட்டு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “மாணவி பிரியா மரணத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சட்ட ரீதியாக உரிய தீர்வு எட்டப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வோம். அந்தக் குடும்பத்துடன் அரசு தொடர்பில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை. ஒன்றிய அரசு கூட ஒப்பிட்டாலும் தமிழகமே சிறந்து விளங்குகிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போதும், “அண்மையில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலர் உயிரிழந்த பொழுது ‘இது கடவுளின் விதி’ எனக் கூறி தப்பித்தது போன்று நாங்கள் செயல்படவில்லை. கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்றது என்ற தவறை உடனே தெரிவித்து அதற்கு தீர்வு என்ற அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறியிருந்தார். தொடர்ந்து இன்று அமைச்சர் சேகர்பாபு மத்திய அரசை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை நேற்று முன் தினம் உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்ட 2 அரசு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவர் தலைமறைவாக உள்ளனர். உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

Exit mobile version