Site icon Metro People

அப்படியெல்லாம் முடியாது; பாக்-இந்தியா போட்டி நடக்கும்: பிசிசிஐ துணைத் தலைவர் திட்டவட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ஐசிசி அமைப்புடனான ஒப்பந்தத்தை மீற முடியாது என்று பிசிசிஐ துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், இந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும், பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

சமீபத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அளித்த பேட்டியில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே உறவுகள் நல்ல முறையில் இல்லை. ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது. ஆதலால், இரு நாடுகளும் மோதும் போட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பஞ்சாப் அமைச்சர் பிரகாத் சிங் அளித்த பேட்டியில், “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் உலகக் கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் மோசமடையாமல் இருக்க வேண்டும். மனித உயிர்களை நாம் காக்க வேண்டும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நிச்சயம் உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால், இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை ஐசிசியுடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துவிட்டது. போட்டியில் பங்கேற்போம் என உறுதியளித்துவிட்டது. ஆதலால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரத்து செய்ய முடியாது.

ஐசிசியிடம் அளித்த உறுதிகளை பிசிசிஐ மீற முடியாது. எந்த நாட்டு அணியுடனும் விளையாட முடியாது என்று மறுக்கவும் கூடாது. ஐசிசி தொடர்பான போட்டிகளில் நிச்சயமாக இந்திய அணி விளையாடும்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version