மதுரை: “நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். நீட் தொடர்பான திமுகவின் நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மதுரை கோச்சடையில் இன்று (ஏப்.4) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாங்கள் மக்கள் பிரச்சினைக்காக போராடி வருகிறோம். இதற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் நாங்கள் வளர்ந்து வந்து விடுவோமோ என நினைத்து திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு திடீரென கச்சத்தீவு மீது காதல் வந்துள்ளது.
இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்ததற்கு ஈடாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கையிடமிருந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பெற்றுக் கொடுத்தார் என காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். அந்த நிலம் எங்கு இருக்கிறது? தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இந்த செயலை செய்தவர்களுக்கு மக்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பது வேதனையானது. இலங்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்தனர். தற்போது இலங்கையை முழுமையாக சீனா ஆக்கிரமித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு சீனா பெரும் அச்சறுத்தலாக உள்ளது.
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லை தாண்டி செல்வதாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். கேரள மீனவர்கள் எல்லை தாண்டும் போது நடவடிக்கை எடுப்பதில்லையே. மற்ற மாநில மீனவர்கள் தாக்கப்பட்டால், சிறை பிடிக்கப்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? தமிழக மீனவர்கள் சிக்கலில் உள்ளனர். கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு காங்கிரஸ் அரசும், பாஜக அரசும், கச்சத்தீவை கொடுத்தது கொடுத்தது தான். அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என பதிலளித்தது.
கச்சத்தீவுக்கு தீர்மானம் வெற்று தீர்மானம். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் உறங்குகின்றது. அதேபோல் இந்த தீர்மானமும். திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டாகிறது. இப்போது ஏன் திடீர் தீர்மானம்?, தேர்தல் வருவதால் தானே? அதிகாரத்தில் இருப்பவர்கள் கச்சத்தீவை மீட்பேன் என்றால் வேடிக்கையாக இல்லையா? பொருளாதார தடை விதித்தால் குட்டி நாடு இலங்கை பயப்படும். அதை செய்யாமல் இருப்பது ஏன்? இந்தியாவை இலங்கை மதிப்பதில்லை. சீனா பக்கம் போய்விட்டது.
கச்சத்தீவை விடுங்கள், கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்கும் உரிமையை பெற்று தந்தீர்களா? எங்கள் வாக்கு, வரி உங்களுக்கு இனிக்கிறது. எங்கள் வாழ்வு கசக்கிறது. இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தியா தயாராக இல்லை. நிரந்தர குடியுரிமை வேண்டாம், இரட்டை குடியுரிமை வழங்கலாம். அதையும் தருவதில்லை. ஆனால் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் குடியுரிமை வழங்கி கவுரம் செய்கிறது.
நாடாளுமன்றத்தில் வக்பு வாரியம் திருத்த சட்டத்துக்கு பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. ஜி.கே.வாசன் ஏன் ஆதரவு அளித்தார் என்பது தெரியவில்லை. இது தவறான முடிவு. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதால், இந்து மக்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என நினைப்பது தவறு. நாட்டின் விடுதலைக்கு போராடதவர்கள் பாஜகவிலும், நாடாளுமன்றத்திலும் உள்ளனர். விடுதலைக்காக போராடியவர்கள் பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருக்கிறார்கள். நாட்டை அடிமைப்படுத்திய பிரிட்டீஷ்காரன் நன்பனாக இருக்கிறான். கிரிக்கெட்டில் விளையாடுகிறான். பாகிஸ்தான், வங்கதேச நாடுகளை பகை நாடாகவே வைத்துள்ளனர். மதத்தை விட்டு வெளியே வராத அரசுகள் மானுடம் மீது, உலக உயிர்கள் மீது எப்படி கருணை காட்டும்?.
விடுதலை பெற்றதில் இருந்து பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, இன்று பல்வேறு மாநிலங்களில் துணை, இணை கட்சியாக தொங்கிக்கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள் சார்ந்திருக்கும் மதத்தை விட்டு நாட்டின் மீது அக்கறை செலுத்த வேண்டும். அப்போது தான் நாடு ஒருமைப்பாடு கொண்ட, இறையாண்மை கொண்ட ஒரே நாடாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழக அரசுக்கும் தெரியும். இருந்தாலும் தேர்தலுக்கு தேர்தல் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள். நீட் தேர்வு கொண்டு வந்ததே இவர்கள்தான். இதனால் நீட்டுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். இவர்களின் அரசியல் நாடகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. எனக்கு கூட்டணி தேவைப்படவில்லை. நான் 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். எங்கள் நிலைப்பாடுகளை ஏற்கும் கட்சிகளை ஏற்போம். வாக்குக்கு காசு கொடுக்காமல் வெல்ல முடியாது என எல்லா கட்சிகளும் நம்புகின்றன. அதற்கு அவசியம் இல்லை என நாங்கள் நினைக்கிறோம்.
அங்குதான் ஊழல் தொடங்குகிறது. அது மாற்று அரசியலாக இருக்காது. ஏமாற்று அரசியலாகவே இருக்கும். பணம் கொடுத்து பெறும் அதிகாரம் மக்களுக்கானதாக இருக்காது. முதலாளிகளுக்கானதாக இருக்கும். தனித்து நின்று அரசியல் அதிகாரம் பெற முடியாது என்பதில்லை. தனித்து நின்று தான் 36 லட்சம் வாக்குகளுடன் அங்கீகாரம் பெற்று வளர்ந்துள்ளோம். நான் சிங்கம் இல்லை, நான் புலி, சுதந்திரமாக காட்டில் வேட்டையாடி முடிந்ததை சாதித்து போவேன்,” என்று சீமான் கூறினார்.