வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் நிலையில், கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக 5-ம் தேதிதஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
6-ம் தேதி கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
7-ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
6, 7-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 35-45கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
6-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய வடதமிழக மற்றும்தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
6-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.
7-ம் தேதி வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 35-55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.