Site icon Metro People

சோழவரம் டூ புழல் ஏரி செல்லும் கால்வாய் கரையோரம் குப்பையால் சீர்கேடு

சோழவரம் ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்: உங்கள் குரலில் வாசகர் புகார் செங்குன்றம் ‘சோழவரம் ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது’ என, உங்கள் குரல் சேவை மூலம் வாசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழின் ’உங்கள் குரல்’ பிரத்யேக புகார் எண் சேவையை தொடர்பு கொண்டு, சோழவரம் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்த செல்வம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் அருகே சோழவரம் மற்றும் புழல் ஏரிகள் என, இரு ஏரிகள் அருகருகே அமைந்துள்ளன.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் இவ்விரு ஏரிகளும் அடங்கும். இதில், சோழவரம் ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில், சுமார் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய், நல்லூர் மற்றும் பாடியநல்லூர் ஊராட்சி பகுதிகள் வழியாக புழல் ஏரியில் சேருகிறது. அவ்வாறு புழல் ஏரியில் சேரும் இந்த கால்வாய் கரையோரம், நல்லூர்ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கல், மருதுபாண்டியர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியும் பொதுமக்கள் குப்பை கொட்டி வருவதால், கால்வாய் கரையோரம் கொட்டப்படும் குப்பை, அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரிக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னையின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது,’’சோழவரம் ஏரியிலிருந்து, கால்வாய்மூலம் புழல் ஏரிக்கு செல்லும் தண்ணீர், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கூடியது என்பதை உணர்ந்து, கால்வாய் கரையோரம், குப்பை கொட்டுவது, கழிவுநீர்விடுவது உள்ளிட்ட செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

சோழவரம் ஏரியில் இருந்து, புழல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை எரிக்காமல், அதனை அகற்றவும், இனி பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் நல்லூர் ஊராட்சி மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Exit mobile version