Site icon Metro People

தமிழகத்தில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம் – ‘பொன்னியின் செல்வன்’ சாதனை

தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ படைத்துள்ளது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பான் இந்தியா முறையில் உருவான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடுவதும், குறைவதுமாக இருந்த நிலையில், படம் முதல் வாரம் மட்டும் ரூ.308.59 கோடியை வசூலித்தது. இரண்டாவது வாரத்தின் 5 நாட்களையும் சேர்த்து படம் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மூன்றாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் படம் உலக அளவில் ரூ.435.50 கோடி வசூலித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பொன்னியின் செல்வன் முதல் வாரம் ரூ. 127.68 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முடிவில் படம் ரூ.181.11 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், படம் ரூ.202.70 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதன்முறையாக ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்த படமாக ‘பொன்னியின் செல்வன்’ சிறப்பு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் ரூ.180 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version