பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பலில் மாகாணங்களுக்கு இடையேயான ஏற்றதாழ்வை தீர்ப்பது தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்நாடகாவில் யார் முதல்வராக இருந்தாலும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது. ஊழலில் எப்போதும் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது.
அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதால் தரமான வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில்லை. சுதந்திரத்துக்கு முன்பு கட்டிய அரசு கட்டிடங்கள் இப்போதும் கம்பீரமாக இருக்கின்றன. தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் 10 ஆண்டுகளில் இடிந்து விழுகின்றன.
கல்யாண கர்நாடகா பகுதியில் ஊழல் இன்னும் அதிகமாக உள்ளது. ஊழல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதால் அந்த பகுதியில் மாகாண ரீதியான ஏற்றதாழ்வுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மக்கள் பிரதிநிதிகள் ஊழல்வாதிகளாக இருந்தால், அரசு அதிகாரிகளும் அப்படிதான் இருப்பார்கள். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா என்ன ஆணை போட்டாலும், அதனை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பசவராஜ் கருத்தை சுட்டிக்காட்டி பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகின்றனர்.