Site icon Metro People

‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ சாகச நிகழ்ச்சிகள் கோவையில் தொடக்கம்

கோவை: கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ சாகச நிகழ்ச்சிகள், வஉசி பூங்கா மைதானத்தில் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சிகளை முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், வீடியோ ஸ்பெக்ட்ரம் செல்வராஜ், கிரேன்ட் ரீஜன்ட் பொதுமேலாளர் ரமேஷ் சந்திரகுமார், நேரு குழுமம் மக்கள் தொடர்பு துறை அதிகாரி முரளிதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளித்தனர். தினமும் மதியம் 1 மணி, 4 மணி, மாலை 7 மணி என மூன்று காட்சிகள் நடக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும்.

இதில், கோமாளிகள், நடனக் கலைஞர்கள், எத்தியோப்பியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சாகச வீரர்கள் கலந்து கொண்டு 30-க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர். நாய்கள் மற்றும் பறவைகளைக் கொண்டு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மரணக்கிணறு என்றழைக்கப்படும் கூண்டுக்குள் பைக் ஓட்டும் சாகச நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றிருந்தது. குட்டிகுட்டி கோமாளிகள், நெட்டைக்கால் மனிதர், பளு தூக்கும் வீரர், சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர், பறந்தபடியே நடனமாடும் ஜோடி என ஒவ்வொரு சர்க்கஸ் கலைஞரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தனர். பாம்பே சர்க்கஸில் சாகச நிகழ்ச்சிகளை காண நுழைவுக் கட்டணமாக ரூ.100 முதல் ரூ 400 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version