Site icon Metro People

ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கியுள்ளது. இதே அகவிலைப்படி உயர்வை அதே தேதியில் இருந்து தமிழக அரசும் வழங்கும் என ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல்தான் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவைக் காரணம் காட்டி ஏற்கெனவே 27 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அகவிலைப்படி உயர்வு வழங்குவதைத் தள்ளிவைக்கக் கூட்டாது என்றும், இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் அமலாகும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், அகவிலைப்படி மூன்று மாதம் முன்கூட்டியே வழங்கப்படுவதால், அரசுக்கு 1,620 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி வழங்கும் எனத் தெரிகிறது.

Exit mobile version