முலான்பூர்: பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சக அணி வீரர் சந்தீப் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
முலான்பூரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் ஆர்ச்சருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சக அணி வீரர் சந்தீப் சர்மா கூறியதாவது: ஐபிஎல் போன்ற மிகப் பெரிய கிரிக்கெட் தொடர்களின் ஆரம்பத்தில் நடைபெறும் போட்டிகளில் அதிகப்படியான அழுத்தம் வீரர்களுக்கு இருக்கும். தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் வலிமையான சூழ்நிலைகளை பந்துவீச்சாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். முதல் 2 போட்டிகளில் பதற்றம் அதிகமாக இருக்கும். ஜோப்ரா ஆர்ச்சர் விஷயத்தில் அதுதான் நடந்துள்ளது என நினைக்கிறேன்.
ஆர்ச்சர் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர் என்பது எங்களுக்கு எப்போதும் தெரியும். அவரது முழுத் திறமையையும், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெளிப்படுத்தினார். வெகு சிலரால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அணி நிர்வாகம் ஆர்ச்சர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. இவ்வாறு சந்தீப் சர்மா தெரிவித்தார்.