நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழ் சினிமாவின் இரண்டு டான்களாக வெற்றிகளைக் குவித்து வருகின்றனர் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒருவர் சிவகார்த்திகேயன், மற்றொருவர் அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கின்றனர், மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியைத் தரக்கூடியது. ரீ-ரிக்கார்டிங் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் படத்தைப் பார்த்துவிட்டேன்.
டாக்டரை விட இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்தத் திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம், ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஓர் அழகான பள்ளிப் பகுதி இந்தப் படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார், சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லைகா புரொடக்ஷன் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.