Site icon Metro People

சண்டை போட ஆயுதங்கள் இருக்கு… உயிர் கொடுக்கதான் எதுவுமில்லை; சாப தேசம்: பூகம்பம் இடிபாடுகளை கையால் அகற்றி சொந்தங்களை மீட்கும் ஆப்கான் மக்கள்

ஆப்கானிஸ்தானில் சாதாரண பெட்டிக் கடைகளில் கூட, ஆளைக் கொல்லும் துப்பாக்கிகளும், தோட்டாக்களும் மலைபோல் குவித்து வைத்து விற்கப்படுவதை பார்க்கலாம். இப்படி பயங்கரமான ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக மக்கள் கையில் கிடைக்கும்படியான மகத்தான ‘சாதனை’ செய்த தலிபான்கள், பேரிடர் சமயங்களில் மக்களின் உயிரை காப்பாற்றும் சாதாரண இயந்திரங்களைக் கூட வைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. இதன் விளைவு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளில் சிக்கிய தங்களின் குடும்ப உறுப்பினர்களை வெறும் கைகளால் தோண்டி எடுக்கும் அவல நிலைக்கு ஆப்கான் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகாலமாக உள்நாட்டு போராலும், தீவிரவாத அமைப்புகளாலும் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வரும் நாடு ஆப்கானிஸ்தான். கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு தகர்த்ததைத் தொடர்ந்து, ஆப்கானில் அதிரடியாக நுழைந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தலிபான்களை விரட்டி அடித்தது. தலிபான் பிடியிலிருந்து 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் மீண்டிருந்த போதிலும், அந்நாட்டு மக்களின் தலையெழுத்து மாறவில்லை. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற, மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

மீண்டும் அதே கடுமையான சட்டங்களிலேயே குறியாக இருக்கும் தலிபான்கள், நாட்டை முன்னேற்ற எந்த வகையிலும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. ஆப்கான் ஒன்றும் சபிக்கப்பட்ட பூமி அல்ல. அங்கு, அரிதான பல வளங்கள் நிறைந்துள்ளன. செம்பு, கோபால்ட், நிலக்கரி, இரும்புத் தாது போன்ற பல தாதுப் பொருள்கள் இந்நாட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. எண்ணெய், எரிவாயு, ரத்தினக் கற்களும் கிடைக்கின்றன. மொபைல் போன்களிலும், மின்சார கார்களிலும் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்குத் தேவையான லித்தியம் இந்நாட்டில் ஏராளமாக கிடைக்கிறது.

சவுதிக்குப் பிறகு மிக அளவில் லித்தியம் தாதுவை கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான். இங்கு கண்டறியப்பட்டுள்ள கனிமங்களின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலானது. அதாவது, ரூ.80 லட்சம் கோடி என்கிறது அமெரிக்கா. ஆனால், இவற்றை தோண்டி எடுக்க நிறைய முதலீடுகள் தேவை. அத்தகைய முதலீடுகளை செய்தால் அடுத்த சில ஆண்டுகளில் வளமான நாடாக ஆப்கானிஸ்தான் மாறும். ஆனால், இப்படியொரு புதையல் இருப்பது தெரியாமலேயே தலிபான்களும், உள்நாட்டு ஆட்சியாளர்களும் ஆப்கானிஸ்தானை பாலைவன பூமியாகவே வைத்துள்ளனர்.

இதனால், நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை நிலவுகிறது. பொருளாதாரம் அடியோடி வீழ்ந்து விட்டது. எந்த உலக அமைப்பிடமும் ஆப்கானிஸ்தானால் கடன் வாங்கி நிலைமையை சரி செய்ய முடியாது. எல்லாமே கையேந்தி இலவசமாகத்தான் வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளது. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவீதம் வெளிநாட்டு நிதிதான். அத்தனையும் தானமாக கிடைக்கக் கூடிய பணம் தான் என்கிறது உலக வங்கி. ஆப்கான் மக்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. அதிலும் அபின் போன்ற போதை வஸ்துக்களை தயாரிக்க பயன்படுத்தும் ஒபியம் விளைச்சல்தான் அதிகம்.

தலிபான்கள் வந்த பிறகு அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டனர். அவர்களின் மத வழக்கப்படி போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதால், ஒபின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானமும் அடியோடு நின்று விட்டது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதிலும் தலிபான்கள் கவனம் செலுத்தவில்லை. 2.9 கோடி மக்கள் தொகையில் 30 லட்சம் இளைஞர்கள் எந்த தொழிற்சார் பயிற்சியும் இல்லாதவர்கள். அங்குள்ள 7,000 கல்வி நிலையங்களில் 30 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்தவை. நாட்டில் எழுத்தறிவு வீதம் 36 சதவீதம் மட்டுமே. இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடுமாகும். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் விட, நாட்டின் ஆயுத பலத்தை அதிகரிப்பதில் மட்டுமே குறியாக இருந்த தலிபான்கள், மக்களை காப்பாற்றக் கூடிய விஷயங்களில் துளியும் கவனம் செலுத்தவில்லை. இதனால் எந்த ஒரு சிறிய இயற்கை பேரிடரையும் சமாளிக்க முடியாத நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இதை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த நிலநடுக்கம் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த புதனன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் இருப்பவை எல்லாம் ஏதோ அடுக்குமாடி குடியிருப்புகள் அல்ல. அத்தனையும் வெறும் களிமண் வீடுகள், செங்கல் அடுக்க வைத்த பலமில்லாத வீடுகள். இவை நிலநடுக்கத்தில் உருக்குலைந்து விட்டன. நிலநடுக்கத்தால், முதல் நாளில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும், 1600 பேர் காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை மீட்பதற்கு தலிபான் வீரர்களால் முடியவில்லை.

அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கான இயந்திரங்களை வாங்கி வைக்காததால், இடிபாடுகளை அகற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை இறுதியில் சடலங்களாக மீட்கும் அவலமே நடந்து கொண்டிருக்கிறது. நேற்றும் 2வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. கடந்த 2 நாட்களில் மேலும் 150 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஆப்கன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்கள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த பூகம்பம் ஆப்கனை மேலும் புரட்டிப் போட்டுள்ளது. இதற்கும் தலிபான்கள் உலக நாடுகளிடம் கையேந்திதான் நிற்கின்றன. உலக நாடுகள் ஏதேனும் உதவிகள் செய்தால் மட்டுமே, வீடுகள் இழந்து, உறவுகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் ஆப்கான் மக்களை காப்பாற்ற முடியும் என்கிற அவல நிலைதான் நிலவுகிறது.

இதுபோன்ற பேரிடர் சம்பவங்களில் இருந்தாவது தலிபான்கள் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எல்லா வளமும் இருந்தும், அதை பயன்படுத்த முடியாத சாப தேசமாகவே ஆப்கான் இருக்கிறது. மக்களை அழிக்கும் ஆயுதங்களை குவிப்பதை விட்டு, மக்களை காப்பாற்றும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

முதல் நபராக உதவிய இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன. பூகம்பம் ஏற்பட்ட கடந்த 2 நாட்களில் இந்தியாவின் சார்பில் 2 முறை நிவாரணப் பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. அண்டை நாடு என்ற வகையில் முதல் நபராக இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது. ஜெர்மனி, நார்வே மற்றும் பல்வேறு நாடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிப் பொருட்களை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளன.

ஆனால், ஐநா அமைப்பு மூலமாக மட்டுமே இந்த உதவிகள் வழங்கப்படும் என்றும் தலிபான்கள் அரசுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது என்றும் அவை அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து உணவுபொருட்கள் ஏற்றிய லாரிகள் ஆப்கனை வந்தடைந்தன. மேலும் ஈரான் மற்றும் கத்தாரில் இருந்தும் விமானங்களில் நிவாரணப் பொருட்கள் ஆப்கன் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நிலையில் உள்ளன. அதை தவிர்த்து ஐநா மூலம் மட்டுமே உதவிகள் கிடைக்கப் பெறும்.

Exit mobile version