திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணப்பயன் மற்றும் தங்க நாணயமானது பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழ்மை நிலைமையில் இருக்கும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதால் வழிகாட்டு நெறிமுறைகளின் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போர் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றிருந்தாலோ விண்ணப்பித்தினை தள்ளுபடி செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணமகளுக்கு 18 வய்தும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் மனுதாரர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
குடும்ப ஆண்டு வருமான சான்றினை ரூ.72,000க்குள் சமர்த்திருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை விண்ணப்பிப்பவரின் மனு தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.