புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், ஆளும் திமுக-வை அதிரடியாக அட்டாக் செய்துவரும் நிலையில், தூத்துக்குடியில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் ரசிகர் மன்றக் காட்சியை தல ரசிகர்கள் கட்டணமின்றி கண்டுகளிக்க அமைச்சர் கீதா ஜீவன் ஸ்பான்சர் செய்த விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.
படம் வெளியான ஏப்ரல் 10-ம் தேதி தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கில் காலையில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்புக் காட்சியின் போது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு, அஜித் ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். அந்தக் கேக்கில் அஜித் படத்துடன், அமைச்சர் கீதா ஜீவன் படமும் இடம்பிடித்திருந்தது கவனிக்கத்தக்கது.
கேக் வெட்டியதோடு மட்டுமல்லாது ரசிகர்களுடன் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் படமும் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார் அமைச்சர். அது ரசிகர் மன்ற ஷோ என்பதால் ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கப்பட்டன. இதற்கான முழுச் செலவையும் அமைச்சரே ஏற்றுக் கொண்டாராம். இந்தக் காட்சிக்காக அஜித் ரசிகர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட இலவச டிக்கெட்டிலும் அமைச்சர் கீதா ஜீவன் சிரித்துக் கொண்டிருந்தார்.
நடிகர் விஜய் 2026 தேர்தலை குறி வைத்து பல்வேறு வியூகங்களை வகுத்து தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அதைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் அனைவரையும் கவனிக்க வைப்பதாக இருக்கிறது. மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பது, மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பது என தூத்துக்குடி தவெக-வினர் தடலாடி கிளப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், சினிமாவில் விஜய்க்கு போட்டியாளராகக் கருதப்படும் அஜித்தின் ரசிகர்களை தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியாகவே ரசிகர் மன்ற ஷோவுக்கு ஸ்பான்சர் செய்து, ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன் என்கிறார்கள்.
கிளியோபட்ரா திரையரங்கில் அமைச்சருடன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பார்த்த அஜித் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “அஜித் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் சிலர் திமுக-வில் உள்ளனர். அவர்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தான் அமைச்சரிடம் பேசி ரசிகர் மன்ற காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். அமைச்சரும் உதவி செய்துள்ளார்.
அமைச்சர் எங்களது நிசழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி தான். ஆனால், இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை. அஜித் ரசிகர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்” என்றார். இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் தரப்பில் கேட்டபோது, “அமைச்சருக்கு ஏற்கெனவே அறிமுகமான அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக அமைச்சரிடம் உதவி கேட்டுள்ளனர்.
அவர்கள் அமைச்சர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அமைச்சரும் அவர்களுக்கு உதவி செய்து கொடுத்துள்ளார். எந்தவித அரசியல் பார்வையோடும் அமைச்சர் ரசிகர் மன்ற காட்சிக்குச் செல்லவில்லை. தனது தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கேட்டுக்கொண்டதாலேயே சென்றார்” என்றனர்.