சென்னை: நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ‘நான் உயிருடன் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்‘ என நேற்று நேரலையில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா, கடந்த 2019-ல் வெளிநாட்டுக்கு தப்பினார். தனித்தீவு ஒன்றை வாங்கி, அதற்கு கைலாசா என்ற பெயரே சூட்டி, அதற்கென தனி பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, பல்வேறு சொற்பொழிவு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 2022-ல் அவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. உடனே நேரலையில் தோன்றிய நித்யானந்தா, தனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக விளக்கம் அளித்தார். அதன்பின்னர், அவர் ஆன்மிக சொற்பொழிவாற்றும் பல்வேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இடையே, அவர் எழுதி வைத்த உயில் தொடர்பாகவும் ஒரு வீடியோ வெளியானது
இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன், நித்யானந்தாவின் உறவினரின் மகன் சுந்தரேஸ்வரன் வெளியிட்ட வீடியோவில், நித்யானந்தா இந்து தர்மத்தை காப்பதற்காக உயிர் தியாகம் செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இது அடுத்த சர்ச்சையை உருவாக்கியது. இருப்பினும், கைலாசா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை நேரலையில் தோன்றி நித்யானந்தா பேசியதாவது: இந்திய நேரப்படி ஏப்ரல் 3-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.41 மணி இப்போது. நான் உயிரோடு, நலமாக, ஆரோக்கியமாக, பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்கிறேன். நல்லபடியாக எனது கைலாசத்தின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக கைலாசம் சம்பந்தப்பட்ட வேலைகள் காரணமாக பொதுத் தளத்தில், வேறு செய்திகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளுக்கு நேரம் கிடைக்கவில்லை. இந்து சாஸ்திரங்களுக்காக உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்துக் கொண்டேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்த கேள்விகள் எழும் என்பதால், நேரலை பேட்டிகளை தவிர்த்து வருகிறேன். வேறு நாடுகளின் உள் விவகாரங்களில் நான் தலையிட மாட்டேன்.
பலர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும், அவர்கள் நினைக்கும் போக்கிலேயே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும், அண்ணாமலையார் சொல்வதைத் தான் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், நேரலையில்தான் பேசுகிறார் என்பதை நிரூபிக்க, யூ-டியூப் நேரலையில் வந்த பதிவு ஒன்றையும் நித்யானந்தா படித்துக் காட்டினார். நித்யானந்தா இறந்து விட்டார் என்ற சர்ச்சைக்கு அவரே நேரலையில் தொன்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.