சிபி சத்யராஜ் நாயகனாக நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படமான ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18- தேதி வெளியாகிறது. இதை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி, முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் இளையராஜா கலியபெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி சிபி சத்யராஜ் கூறும்போது, “சென்னையிலிருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. அதை யார் செய்தார்கள், எதற்காகச் செய்தார்கள் என்பது தான் கதை. இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நான் வருகிறேன். மறுநாள் காலையில் சபரிமலை செல்ல வேண்டும் என்ற நிலையில் 10 மணி நேரத்துக்குள் எப்படி விசாரித்து கொலையாளியை கண்டுபிடிக்கிறேன் என்கிற திரைக்கதை, யாரும் யூகிக்க முடியாததாக இருக்கும். இதற்கு முன், சில படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான கதைதான். வேகமான திரைக்கதை என்பதால் ரொமான்ஸ் காட்சிகள் இதில் இருக்காது. அடுத்து ‘ஜாக்சன் துரை 2’, ‘ரேஞ்சர்’ படங்களில் நடித்திருக்கிறேன்”. இவ்வாறு சிபி சத்யராஜ் கூறினார்.