திருவாரூர்: ‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்! திருவாரூர் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய விழாவான ஆழி தேரோட்ட விழா இன்று (ஏப்.7) திருவாரூரில் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்ட உலக பிரசித்தி பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டமானது இன்று காலை 9.01மணிக்கு தொடங்கியது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடத்தை பிடித்து இழுக்க, ஆழித்தேர் நிலையடியிலிருந்து புறப்பட்டது. ஆழித்தேர் புறப்பட்டபோது, ‘ஆரூரா தியாகேசா’ என பக்தி முழக்கமிட்டு ஆரவாரத்துடன் பக்தர்கள் உற்சாகமாக தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் பஞ்ச வாத்தியங்களை இசைத்து தேரோட்டத்தில் பங்கேற்றுள்ள மற்ற பக்தர்களை சிவனடியார்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு.. இந்த தேரோட்டத்துக்காக வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் சங்கமித்துள்ள நிலையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் ஆங்காங்கே மருத்துவ உதவி குழுக்கள் மருத்துவ உதவிக்கு தயார் நிலையில் உள்ளனர், நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உள்ளூர் விடுமுறை: இந்த ஆழித் தேரோட்ட விழாவுக்காக திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆழி தேரோட்ட விழாவை காண வரும் பக்தர்களுக்காக பல்வேறு தனியார் நிறுவனங்களும் சிவ பக்தர்களும் தன்னெழுச்சியாக நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்த்து வருவதோடு, அன்னதானம் வழங்கியும் பக்தர்களை பசியாற்றுகின்றனர்.