Site icon Metro People

துருக்கி பூகம்பம்: 6 வயது சிறுமியை மீட்க உதவிய இந்திய மோப்ப நாய்கள் ரோமியோ, ஜூலி

துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு மோப்ப நாய்கள் கண்டுபிடித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து அங்கு தேடுதல் பணி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், நுர்தாகி என்ற இடத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இயங்கி வரும் இந்தியாவின் தேசியப் பேரிடர் மீட்புப் படையான NDRF-ன் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கக்கூடும் என அங்குள்ள மக்கள் தெரிவித்ததை அடுத்து ரோமியோ, ஜூலி ஆகிய மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் முதலில் சென்ற ரோமியோ, உள்ளே சென்று குரைத்து தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உள்ளே யாரோ இருப்பதை அறிந்து கொண்ட இந்திய மீட்புக் குழுவினர், அதை உறுதிப்படுத்த ஜூலியை அனுப்பி உள்ளனர். அதுவும் உள்ளே சென்று குரைத்து தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதில், உள்ளே 6 வயது சிறுமி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, ரோமியோ மற்றும் ஜூலிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version