தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 3’, ‘அரண்மனை 4’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராஷி கன்னா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மொழி பிரச்சினையாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வது இப்போதும் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ரீமேக் செய்யப்படும் ஒரிஜினல் படங்களை ஆன்லைனில் பார்க்க முடியும் என்பதால் பாலிவுட் அதை உணர்கிறது என அறிகிறேன். ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு மொழி பிரச்சினையாக இருப்பதில்லை. அதனால் ஒரிஜினல் கதைகளிலும் வெவ்வேறு வகை திரைப்படங்களை உருவாக்குவதிலும் பாலிவுட் கவனம் செலுத்த வேண்டும்.
நடிகர்கள் இப்போது மொழியைத் தாண்டி, சிறந்த படங்களில் தாங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறையும் அதன் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கிறது. அவர்களின் படங்களில் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். இந்தப் பன்முகத்தன்மையிலும் கூட நாம் ஒற்றுமையாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் உணர்வுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அது பொதுவான ஒன்றாகத்தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.