கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உள்பட இருவர் பலியாகினர். நிமோனியா காய்ச்சலுக்கு 7 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பழையங்காடு பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் 6 வயது மகள் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், கோவை அன்னூரை சேர்ந்த கணேசன் (38) என்பவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 1-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேலும், கோவை அன்னூரை சேர்ந்த 7 மாத பெண் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.