பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் இருக்கும் உலக நாடுகளுக்கு கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் சமநிலையையும், சர்வதேச வர்த்தகத்தின் மூலம் நீண்ட காலமாக அமெரிக்கா பயனடைந்து வந்துள்ளது என்பதையும் புறக்கணிக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது. மேலும் சீனா தனது சொந்த நலன்களை பாதுகாக்க எதிர்நடவடிக்கையில் ஈடுபடும்.”என்று தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதில் அதிகபட்சமாக கம்போடியா 49 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், இலங்கை 44 சதவீதம், சீனா 34 சதவீதம், இந்தியா 26 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 20 சதவீதம் என வரி விதிப்பை ஏப்ரல் 9-ம் தேதி முதல் எதிர்கொள்ள இருக்கின்றன.
இந்த புதிய வரி விதிப்புகளை நேற்று (புதன்கிழமை) ட்ரம்ப் அறிவித்தார். இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்த 20 சதவீத வரி அறிவிப்புடன் புதிய வரிகள் 54 சதவீதமாக இருக்கிறது. இது அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது 60 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு மிகவும் அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 9-ம் தேதி இந்த புதிய வரிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக மற்ற அனைத்து நாடுகளைப் போல சீனாவும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 10 சதவீதம் அடிப்படை வரியை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இது புதிய வரிவிதிப்பான 34 சதவீதத்தின் ஒரு பகுதியாகும்.
அதேபோல், சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து குறைந்த மதிப்புள்ள பேக்கேஜ்கள் அமெரிக்காவுக்கு வரி இல்லாமல் நுழைய அனுமதிக்கும் டி மினிமிஸ் என்ற வர்த்தக சலுகையை நிறுத்தும் நிர்வாக ஒப்பந்தத்திலும் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.