Site icon Metro People

சென்னையில் அனைத்து இடங்களிலும் நிலத்திற்குள் மின்சார ஒயர்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8,905 மின்மாற்றிகளை மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதைவிட கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடை நேரத்தின் போது, கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், ஜி.கே.மணி, சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமும், பென்னகரம் தொகுதியில், உபகோட்டத்தை கோட்டமாகவும் தரம் உயர்த்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், முன்னுரிமை அடிப்படையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் எனவும் கூறினார்.

மேலும், தமிழகம் முழுவதும் 176 கோட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும்,அதற்கான பகிர்ந்தளிப்பதற்கான விகிதாரச்சாரம் சரியாக இல்லை என்றும், பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேப்போல், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8,905 மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதைவிட கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

Exit mobile version