Site icon Metro People

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார். அப்போது அவர், இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டு படங்களை எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவை தொடர்பாக  2 திட்டங்களை அறிவித்தார். இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்கு தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த 2 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி வெளிநாட்டு படங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக தயாரிப்பதற்கு ரூ.2 கோடி வரையிலும், வெளிநாட்டு படங்களுக்கான படப்பிடிப்புகளை இந்தியாவில் நடத்துவோருக்கு, ரூ.2.5 கோடி வரையிலும் ஊக்கத்தொகை அளிக்கப்படும். அதாவது, கூட்டாக படம் தயாரிக்கும் சர்வதேச திரைப்பட நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்படக்கூடிய தகுதி வாய்ந்த செலவினத்தில் 30 சதவீதம் வரை திரும்ப பெறலாம். வெளிநாட்டு திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை, அதாவது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் கூடுதலாக (65,000 அமெரிக்க டாலர்) திரும்ப பெறலாம்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய சினிமாவில் காணப்படும் படைப்பாற்றல், உயர் சிறப்பு திறன் மற்றும் புதுமைகள், சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்திய திரைப்பட துறை, சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்த்திருப்பதுடன், 2022ம் ஆண்டு முதல், இந்தியாவில் திரைப்படங்களை தயாரிப்பதற்கான சிறந்த காலக்கட்டமாக மாற்றியிருக்கிறது. டிஜிட்டல் ஓடிடி தளங்கள் இந்திய திரைப்பட துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது சர்வதேச மற்றும் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே ஒன்றிய அரசின் உறுதியான நோக்கம். படைப்பாற்றல் மிக்க இந்த தொழிலுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்பதே அரசின் நோக்கம்’ என்றார்.இந்த நிகழ்ச்சியில், 53-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கான அதிகாரபூர்வ சுவரொட்டியையும், அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

Exit mobile version