லக்னோ: சில இன்னிங்ஸில் குறைந்த ரன்கள் எடுத்ததை வைத்து ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை மதிப்பிட வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். அதனால் அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 0, 8, 13 என மூன்று இன்னிங்ஸில் மொத்தமாக 21 ரன்கள் தான் ரோஹித் எடுத்துள்ளார். அவரது ஆட்டம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரோஹித்தை ஆதரித்து பொல்லார்ட் பேசி உள்ளார்.
“இளையோர் கிரிக்கெட் முதல் அவருடன் சேர்ந்தும், எதிரணியிலும் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. பல்வேறு தருணங்களில், பல்வேறு பார்மெட்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அவர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். வரலாற்றில் அவரது பெயர் இடம் பிடித்துள்ளது.
சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் வகையில் ரன் சேர்க்க முடியாது. அது கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதி. அனைத்து வீரர்களும் அந்த கட்டத்தை கடந்து வந்தவர்கள் தான். இப்போது இந்த விளையாட்டை அனுபவித்து ஆடும் உரிமை ரோஹித்துக்கு உள்ளது. அவருக்கு நாம் அழுத்தம் தர வேண்டியதில்லை. நிச்சயம் அவர் பெரிய அளவில் ரன் குவிப்பார்.” என பொல்லார்ட் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) லக்னோ அணியுடன் மும்பை பலப்பரீட்சை மேற்கொள்கிறது.