குஜராத் மாநிலத்திற்குள் புதிய தோற்றங்களுடன் ‘அர்பன் நக்சல்’கள் நுழைய முற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநில பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதல் மருந்து பூங்காவை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர். பின்னர் அவர் பேசுகையில், குஜராத் மாநிலத்திற்குள் புதிய தோற்றங்களுடன் ‘அர்பன் நக்சல்கள்’ நுழைய முற்படுகிறார்கள். அவர்கள் தங்களின் உடைகளை மாற்றியுள்ளனர். நம் மாநிலத்தின் துடிப்புமிகு இளைஞர்களை அவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர். இந்த அர்பன் நக்சல்கள் நம் இளம் தலைமுறையினரை அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நம் குழந்தைகளுக்கு இவர்கள் குறித்து எச்சரிக்கை வழங்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் முகவர்கள். அவர்களுக்கு குஜராத் ஒருபோதும் தலைவணங்காது. குஜராத் அவர்களை அழித்துவிடும்” என்றார்.
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், “2014ல் நான் பிரதமராகப் பதவியேற்றபோது, இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்தது. இப்போது 2022-ல் நாம் உலகளவில் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்திருக்கிறோம்” என்று கூறினார்.
குஜராத் தேர்தல்: குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தத் தேர்தலில் பஞ்சாப்பை கைப்பற்றியதுபோல் குஜராத்திலும் தடம் பதிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் வெற்றி நிச்சயம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் முழங்கி வருகிறார். இந்நிலையில், அண்மையில் வெளியான ஏபிபி சி வோட்டர் கருத்துக் கணிப்பு குஜராத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும். குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 135 முதல் 143 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு 36 முதல் 44, ஆம்ஆத்மிக்கு 0 முதல் 2, பிற கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 46.8%, காங்கிரஸுக்கு 32.3%, ஆம் ஆத்மிக்கு 17.4% வாக்குகள் கிடைக்கும். இப்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியினரை அர்பன் நக்சல் என்று மறைமுகமாக தாக்கியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.