Site icon Metro People

அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் சிலை, மணிமண்டபம் திறப்பு

மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எச் வசந்தகுமார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அவரது சிலை மற்றும் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

சிலை திறப்பு மற்றும் மணிமண்டபம் திறப்பு விழாவில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, கில்லியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வசந்தகுமாரின் மணிமண்டபம் மற்றும் முழு உருவச் சிலையை திறந்து வைத்து பேசிய கே.எஸ்.அழகிரி, “வசந்தகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தை விட காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும். 50 ஆண்டுக்கால தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போதும் அதில் தீவிரமாக உழைத்தவர் வசந்தகுமார். பெருந்தலைவர் காமராஜரின் ரத்தத்தின் ரத்தம் வசந்தகுமார். பிசிராந்தையார், கோப்பெரும் சோழன் போல் எங்கள் இருவருக்கும் கருத்து புரிதல் இருந்தது. தன் சொந்த சோகத்தை மறந்துவிடும் தன்மை வசந்தகுமாரிடம் உண்டு. மரணம் அவருக்கு வரும் என கனவிலும் நினைத்தது கிடையாது. மார்ஷ்சல் நேசமணி, காமராஜர் போன்று வசந்தகுமார் இந்த மண்ணுக்கு உரியவர்.” என்று கூறியுள்ளார்.

1950 ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த வசந்தகுமார், 2006- 2011, மற்றும் 2016-2019 ஆண்டு காலகட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 2019 ஆம் ஆண்டு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிவந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் மற்றும் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version