புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று (வியாழக்கிமை), புவனேஸ்வரில் உள்ள சங்கா பவனின் தாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1997 -ம் ஆண்டு கட்சித் தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து 8 முறை நவீன் பட்நாயக்கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடைசியாக பட்நாயக் கடந்த 2020 பிப்ரவரியில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசாவின் பிராந்தியக் கட்சிக்கு பிஜு ஜனதா தளம் என பெயரிட காரணமாக இருந்த தனது தந்தை பிஜு பட்நாயக்கின் 28-வது நினைவு நாளில் நவீன் தனது தலைவர் பதவிக்கான வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
பின்பு பேசிய நவீன் பட்நாயக் நேரடியாக பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல், “தற்போது சிலர் வேண்டுமென்ற நமது மகன்களின் தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை இழிவுபடுத்த முயற்சி செய்கின்றனர். வரலாற்றினை மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் வரலாறு ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் நாட்டினை இணைக்கும் அனுபவத்தினை பிரதிபலிக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாருடைய விருப்பத்துக்காகவும் அதனை மாற்ற முடியாது.
2000 முதல் 2024 வரையிலான பிஜு ஜனதாதளம் அரசில் ஒடிசா குறிப்பிட்டத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.