புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது
10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.
இந்நிலையில், சீனாவைத் தவிர உலக நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியா முனைப்புக் காட்டி வருகிறது.
இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் உள்ளது. ஆனால் இதில் தேசத்தின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். எந்தச் சூழலிலும் அழுத்தத்தின் பேரில் பேச்சுவார்த்தை நடக்காது. நான் இதை பல்வேறு தருணங்களிலும் வலியுறுத்திக் கூறியுள்ளேன். துப்பாக்கி முனையில் எல்லாம் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட காலக்கெடு நிர்ணயிப்பது என்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதற்காக நம் முடிவை துரிதப்படுத்த அவர்கள் அழுத்தம் தர முடியாது. நாட்டு மக்களின் நலனே பிரதானம். அதை பாதுகாக்கும் வகையிலேயே முடிவுகள் எட்டப்பட வேண்டும். அவசரம் எதிலும் நல்லதல்ல. இந்தியாவே பிராதனம் என்ற கொள்கையின் படி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. அகண்ட பாரதம் 2047 இலக்குக்கு ஏற்றவாறு அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
அவசரத்துக்கு தயார்.. முன்னதாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்காவின் சமீபத்திய வரிகள், நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களில் நமது மனதை ஒருமுகப்படுத்தியுள்ளது. மேற்கத்திய பொருளாதாரங்களுடன் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நமது ஒத்துழைப்பை நாம் வளர்க்க வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்த முடிந்தால், இவை இந்த ஆண்டு நமக்கு சாதகமாக அமைந்தால், நாம் வேறு சூழ்நிலையில் இருப்போம். இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்துக்கு தயாராக உள்ளது.” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கு நேரெதிராக அவசரம் தேவையில் தேசத்தின் நலனே பிரதானம் என்று வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.