“உதயநிதி பேச்சுக்கு ‘ஜால்ரா’ போட மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை” – ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை: “திமுக எம்எல்ஏ-க்களை போல் உதயநிதி பேச்சுக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணனூர் மு.ஆண்டிப்பட்டி கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், ஆர்.பி.உதயகுமார் பேசியது: “தமிழகத்தில் ‘பூத்’ கமிட்டியை பொறுத்தவரையில் அதிமுக மிகபலமாக இருக்கிறது. மிக அற்புதமாக கே.பழனிசாமி வடிவமைத்தள்ளார்.

மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலர் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இந்த சம்பவங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாகும். ஆனால், இதை பற்றி விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.

உள்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் இதற்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் கேள்வி கேட்ட முறை சரி இல்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால், வெற்றிலை பாக்கு வைத்து மேளதாளம் சீர் வரிசை வைத்து, உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் கொலைக்கு காரணம் கூறுங்கள்? என்று கேட்கவா முடியும். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்காமல் ஆளும்கட்சித் தலைவர் ஸ்டாலினா? அரசை நோக்கி கேள்வி எழுப்ப முடியும்.

எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கு முதல்வரால் பதில் அளிக்க முடியவில்லை. உதயநிதி பேசும்போது சட்டசபையில் அதிமுக இருக்கக் கூடாது என திமுக திட்டமிடுகிறது. ஏனென்றால் குறுக்கே கேள்வி கேட்பார்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியாது. எனவே, சபை காவலரை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். பட்டத்து இளவரசர் உதயநிதி சிறப்பாக பேசுகிறார், அழகாக பேசுகிறார் என்று திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை போல் ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை. குற்றம் குறைகளை தோலூரித்து காட்டவே மக்கள் எங்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளனர்”, என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், கே தமிழரசன், மாநில நிர்வாகிகள் தனராஜன், ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.