விசாகப்பட்டினம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஜேஇஇ தேர்வை தவறவிட்டுவிட்டதாக 30 மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று (ஏப்.07) காலை என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து போலீஸார் பொதுமக்கள் செல்லும் பாதையில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்வு மைய அதிகாரிகள் தங்களை தேர்வெழுத அனுமதிக்கவில்லை என்று 30 மாணவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்வு எழுத முடியாத மாணவர்களின் பெற்றோர்கள் இதுகுறித்து கூறும்போது, “நீண்ட நேரமாக டிராபிக்கில் சிக்கிக் கொண்டதால் எங்கள் பிள்ளைகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்காக வேறொரு நாளில் மீண்டும் தேர்வு நடத்துவதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் பரிசீலனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்வு நேரங்களில் போக்குவரத்து மேலாண்மை திறமையற்றதாக இருந்ததால் மாணவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான YSR காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் கார்த்திக் யெல்லபிரகடா இது குறித்து கூறும்போது “இந்த மாநிலத்துக்கு ஒரு சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவை. தனது சினிமா பிம்பத்துக்கு உண்மையாக இருக்கும் நடிகர்/அரசியல்வாதி, பொது மக்களை ஒரு பிரஸ் ரிலீஸ் நிகழ்வைப் போல தொடர்ந்து நடத்துகிறார். சினிமா தருணங்களுக்கு கைதட்டுவதை நிறுத்திவிட்டு உண்மையான பொறுப்புணர்வை கோரத் தொடங்க வேண்டிய நேரம் இது” என்று விமர்சித்துள்ளார்.