மாடுகளில் பல வகை உண்டு. நிறம், கொம்பு, சுழி ஆகியவற்றைக் கொண்டு வகை பிரிப்பார்கள். பார்ப்பதற்கு ஒன்றுபோல் நமக்குத் தெரியும். ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் விவசாயிகள், மாடு வியாபாரிகளுக்கு அத்துப்படி. மாட்டு சுழிகளையே 10 வகையாகச் சொல்வார்கள்.
அதேபோல் மாட்டின் வயதையும் விவசாயிகள் சரியாகக் கணித்து விடுவார்கள். ‘பல்ப் போட்டுருச்சா?’ என்று கேட்பார்கள். இது மாட்டின் பிராயத்தைக் குறிப்பது. கீழ்வாயில் பால் பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் ‘பல்ப்’ என்றார்கள். வருஷத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். 4 வருடங்களில் 8 பற்கள் போட்டு விடும். இதை ‘கடைத்தேர்ச்சி’ அதாவது ‘கடைசி பல் போடுதல்’ என்பார்கள்.
மாட்டுத்தாவணியில் மாடுகளை விற்போரும் வாங்குவோரும் தரகர்களை வைத்துக் கொண்டு கையில் துண்டைப் போட்டு விலை பேசுவார்கள். ஒவ்வொரு விரலைப் பிடிப்பதற்கும் ஒவ்வொரு விலை உண்டு. ஐந்து விரலை கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய் என்று அர்த்தம். அதை ஒரு குலுக்கு குலுக்கினால் 1000 ரூபாய். விரல்களில் உள்ள ஒவ்வொரு வரையை அழுத்தினால் 10 ரூபாய் கூடுதல் என அர்த்தம். இந்த முறைகளைப் பின்பற்றித்தான் மாடுகள் விலை பேசப்படும்.
நாட்டுக் கோழிகளும் ஏறத்தாழ 10 வகை உண்டு. ஆடுகளைப் பொறுத்தவரை வெள்ளாடு, கருப்பு ஆடு மட்டுமல்ல… அவற்றிலும் கிட்டத்தட்ட 25 வகைகள் உள்ளன
கடிகாரம் இல்லாத காலத்தில் கிராமங்களில் விடியல் பொழுதுகளை பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ஒரு கண்ணுக்கு உறங்கி, சாம ஏமத்திலே, சாமக்கோழி கூப்பிட, தலைக்கோழி கூப்பிட என்பார்கள். வெள்ளி முளைக்க, முத்தம் தெளிக்கிற நேரம் – இது காலை 6 மணியை குறிக்கும் சொற்கள்.
காலம்பற, நிலங்கரை, விடிஞ்சி இது 8 மணிக்கான சொற்கள். பொழுது புறப்பட, முந்திக் கற்காலை இது மாலை 4 – 5 மணியை குறிக்கும் வார்த்தைகள். கருக்கால, மம்மல்ல என்பது இரவு 7 மணியைச் சொல்கின்ற வார்த்தைகள். அதேபோல் சாயங்காலம், ஊரடங்க, இரவை, நிலாப் புறப்பட, நடுச் சாமம், அர்த்த ராத்திரி என்றெல்லாம் சொல்வதுண்டு.