சென்னை: ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஏப்.8) தீர்ப்பளித்தது. அதில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியதாவது: அவைக்கு ஒரு மகிச்சியான செய்தியை தெரிவிக்க விரும்பிகிறேன். ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநருரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, பல முக்கிய சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.
அதை நாம் மீண்டும் அவருக்கு அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டமன்றம் நிறைவேற்றிய, சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என அரசியலமைப்பு வரையறுத்த போதிலும், இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வந்தார். மேலும் அவருக்கு அதிகாரம் இருப்பதாக சொல்லிவந்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று, ஆளுநர் சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைத்திருந்தது, சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனg கூறியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்ரை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.