வில்லிசைப் பாட்டுக் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வில்லிசைப் பாட்டுக் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற வில்லிசைப் பாட்டுக் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் (93) வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன்.
இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று “வில்லிசை வேந்தர்” எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய்துள்ளார்.
மூத்த கலைஞரான சுப்பு ஆறுமுகத்தின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.