Site icon Metro People

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதர ஒத்துழைப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறாக அறிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி “எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் வைசாக் நகருக்கு குடியேறுகிறேன்” என்று கூறினார்.

ஏற்கெனவே ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகராக்குவது பற்றி கூறியிருந்தார். மாநிலத் தலைமையகமாக விசாகப்பட்டினம் செயல்படும். அது ஆளுநரின் தலமாகவும் இருக்கும். ஆனால், சட்டப்பேரவை அமராவதியிலிருந்து இயங்கும். உயர் நீதிமன்றம் கர்னூலுக்கு மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.

1956-ல் ஆந்திரா மெட்ராஸில் இருந்து பிரிக்கப்பட்டபோது கர்னூல்தான் அதன் தலைநகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அவர் இன்று (ஜன.31) அறிவித்திருக்கிறார்.

Exit mobile version