அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபில் பொச்சசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் கோயில் (பிஏபிஎஸ் கோயில்) உள்ளது. இது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பக்தி மற்றும் உலகளாவிய இந்து பெருமையின் அடையாளமாக விளங்குகிறது.
இந்நிலையில், பிஏபிஎஸ் கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணி முதல் 12 மணி வரை ராமர் பஜனையும் அதன் பிறகு ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் ஆரத்தியும் நடைபெற்றது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த ராமர் மற்றும் சுவாமி நாராயண் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அமைதி, ஒற்றுமை மற்றும் இந்து மத மதிப்புகளின் கலங்கரை விளக்கமாக அமைந்தது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மேடையில் நடைபெற்ற சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி, இந்த நிகழ்வின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். இளம் கலைஞர்கள் ராமரின் வாழ்க்கையை இசை, நாடகம் மற்றும் கதை சொல்லல் மூலம் எடுத்துக் கூறினர்” என கூறப்பட்டுள்ளது.