ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் புதிய கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடன் பணியாற்றிய அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் மீது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்சாட்டு, தலைமறைவு குற்றச்சாட்டின் கீழ் வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் ஏற்கெனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. தநைகர் தாகாவின் புறநகரில் உள்ள பூர்பாசல் பகுதியில் அரசு நிறுனம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை, சைமா புதுல், அப்போது பிரதமராக இருந்த தனது தாய் ஷேக் ஹசீனாவின் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு அரசு பணம் 4000 கோடி டாகாவை வீண் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட தாகா பெருநகர சிறப்பு நீதிபதி ஜாகிர் உசைன் காலிப் ஷேக் ஷசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக புதிய கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது மகள் சைமா, டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டலத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.