மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது, ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது, வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராகச் சென்று வழிபட்ட விநாயகர் சிலைகளைக் கரைக்கவும், கோயில்களின் சுற்றுப்புறத்திலும் வெளிப்புறத்திலும் சிலைகளை வைத்துவிட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (செப். 04) சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, நாகர்கோவில் தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கரோனா மூன்றாவது அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில்தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது” எனத் தெரிவித்தார்.