மல்யுத்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின்படி, அஜய் மிஸ்ரா, மதியம் 2 முதல் 4 மணி வரை அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் இல்லை.உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஷ்ராவின் மகனான, அஜய் மிஷ்ராவை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி மாவட்டத்தின் டிகோனியா எனும் கிராமத்திற்கு, உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா வருவதை கண்டித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மத்திய அமைச்சர் மகன் பயணம் செய்த எஸ்.யூ.வி கார் மோதியதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் பலியானதாகவும், அதற்காக பாஜகவினர் பயணம் செய்த காரை கவிழ்த்து அதிலிருந்த 4 பேரை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அன்று நடைபெற்ற கலவரத்தில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
அஜய் மிஸ்ரா கைது ஏன்?
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் விவசாயிகளின் மீது மோதிய கார் மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ராவின் மகன் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமானதாகும். அஜய் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர் கடந்த வெள்ளியன்று போலீஸ் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர், அன்று அவர் ஆஜராகாததால் நேற்று மீண்டும் ஆஜராக புதிய சம்மன் அனுப்பினர். இதனிடையே நேற்று காலை 10.30 மணியளவில் அவர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நேற்றிரவு கைது செய்தனர்.
மல்யுத்த நிகழ்ச்சியில்..
உத்தரப்பிரதேச காவல்துறை வட்டாரங்கள் என்.டி.டி.விக்கு அளித்திருக்கும் தகவல்படி, அஜய் மிஷ்ராவால் பல கேள்விகளுக்கு பதில் தரமுடியவில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் அஜய் மிஷ்ரா, சம்பவ இடத்தில் இருந்து 4 முதல் 5 கிமீ தொலைவில் உள்ள மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த மல்யுத்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின்படி, அஜய் மிஸ்ரா, மதியம் 2 முதல் 4 மணி வரை அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் இல்லை என கூறியிருக்கின்றனர்.
மேலும் அஜய் மிஸ்ராவின் டவர் இருப்பிடமும், சம்பவம் நடந்த இடத்தை தான் காட்டியிருக்கிறது. இருப்பினும் அஜய் மிஸ்ரா சம்பவம் நடந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள அவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் இருந்ததாக அவர் விசாரணையின் போது கூறியிருக்கிறார்.
இதனிடையே விவசாயிகள் தாக்கியதில் அஜய் மிஸ்ராவின் டிரைவர் ஓம் பிரகாஷ் உட்பட மூன்று பாஜகவினர் கொல்லப்பட்டது குறித்து பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான முதல் தகவல் அறிக்கையின்படி, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான அந்த காரை டிரைவர் ஓம் பிரகாஷ் தான் ஓட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் குறித்து வெளியான வீடியோவின்படி காரை ஓட்டியது வெள்ளை நிற ஆடை அணிந்த நபர் என காட்டுகிறது. ஆனால் ஓம் பிரகாஷ் அணிந்திருந்தது மஞ்சள் நிற ஆடை என தெரியவந்துள்ளது.
மேலும், அஜய் மிஸ்ரா கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைப்பும் தராததால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் வட்டாரம் தெரிவித்திருப்பதாக என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.