புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் புதிய ராமர் கோயில் கட்டுவதற்காக அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமி முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. ராம நவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் சுமார் 2,500 ஊர்வலங்கள் நடைபெற்றன. பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலங்களுக்காக ஏராளமான மக்களைத் திரட்டினர்.
முஸ்லிம் பகுதிகளை இந்த ஊர்வலங்கள் கடக்கும்போது இருபுறமும் திரண்ட முஸ்லிம்கள் இனிப்புகள் விநியோகம் செய்தனர். மேலும், குடிக்க தண்ணீரும் வழங்கினர். மால்டாவில், முஸ்லிம்கள் இனிப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் பக்தர்கள் மீது பூக்களும் தெளித்து மதநல்லிணக்கத்தைக் காட்டினர். கொல்கத்தாவில் மட்டும் ராம நவமி அன்று 60-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன,
இதையொட்டி தலைநகரின் பல முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டது. கைகளில் வாள் போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் அமைதியாகவே நடந்தது . இதனிடையே, புதிய ராமர் கோயில், பூர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில் உள்ள சோனாச்சுரா கிராமத்தில் கட்டப்படுகிறது. இதற்கு மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டம் நடந்த இடமான நந்திகிராம் இதன் அருகில் உள்ளது. இதனால், புதிதாக ராமர் கோயில் கட்டப்படும் இடம் மேற்கு வங்க மாநில அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் காவி உடையுடன் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியும் கலந்து கொண்டார். முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மாநிலத்தில் இந்த ஆண்டு ராமநவமி புதிய உருவம் பெற்றிருந்தது.
ஜார்க்கண்ட் தலைநகரான ராஞ்சியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ராமநவமி கொண்டாடினார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரான அவர் நேற்று ராஞ்சியில் புகழ்பெற்ற ஸ்ரீ ராம் ஜானகி தபோவன் கோயிலில் சிறப்பு பூசை செய்தார். மேலும், தபோவன் கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்களுக்கு ராமர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் சோரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.