Site icon Metro People

பொதிகை டிவி, வானொலிகளில் இந்தி தெரியாதவர்கள் வெளியேற்றமா?- முத்தரசன் கண்டனம்.

 பொதிகை தொலைக்காட்சி, வானொலிகளில் இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம், மற்றவர்கள் வெளியேறலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் ஒலி, ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதிகை மற்றும் வானொலி ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம், மற்றவர்கள் வெளியேறலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது இந்தி மொழி திணிப்பின் மோசமான செயலாகும். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் பணியாற்றும் மாவட்ட அளவிலான நிருபர்கள், செய்தியாளர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள் தமிழ் பேசும் மக்களிடம்தான் செய்திகளைச் சேகரிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமோ, அவசியமோ இல்லை. இவர்களிடமிருந்து செய்திகளைப் பெறுகிற தலைமை அலுவலகம் தேவையான மொழிகளுக்கு மாற்றம் செய்துகொள்ள முடியும். இந்த வாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாறாக இந்தி மொழி தெரியாத பணியாளர்களைப் பணி நீக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். அவர்கள் தொடர்ந்து நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றவும், குறைந்தபட்ச ஊதியமும், இதர சலுகைகளும் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version