Site icon Metro People

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்படுமா? – விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல்

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. ஜாதிக்கயிறு கட்டுதல், பேருந்துகளின் படிகளில் தொங்கிச் செல்லுதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். தங்களின் வீடு மற்றும் சமூகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், முதல்வர் சொன்னது போல் ‘உங்களது கவனத்தை படிப்பில் மட்டும் தான் நீங்கள் செலுத்த வேண்டும்’. மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் போது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். மாணவர்களுக்கும் கவுன்சலிங் வழங்கப்படும். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் சில தினங்களில் வெளியிடப்படும்.

3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘ஊஞ்சல்’ என்ற இதழும், 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘தேன் சிட்டு’ என்ற இதழும், ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவற்றில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடலாம்.

பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பெற்றோருடன் ஆலோசித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது மேலும் 6 லட்சம் அதிகரித்து, மாணவர்களின் எண்ணிக்கை 53 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் – ஆசிரியர் கூட்டம்

இதற்கிடையில், அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மாணவர் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கருத்தை இரு தரப்பும் உணர்ந்துகொள்ள ஏதுவாக, வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் மாதம்தோறும் பெற்றோர் – ஆசிரியர் – மாணவர் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்..

Exit mobile version