Site icon Metro People

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா.. ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11 ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் அதிமுக பொதுக்குழுவில் பிரச்சினை செய்ய சமூக விரோதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தடுக்க பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஜூலை 11ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திங்கள் மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை இன்று (புதன் கிழமை) விசாரிப்பதாக அறிவித்தார்.

இதனிடையே கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு கட்சி செயல்பாடுகளை முடக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரிக்கிறது. ஒரே நாளில் இரண்டு மனுக்கள் விசாரணைக்கு வருவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் மனு அளித்துள்ளார். அதில், பொதுக்குழு கூட்டத்தையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் தொழில்நுட்பம் மற்றும் விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தேவையற்றவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதால், அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதற்கிடையில், சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக் குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 36 ஆயிரம் சதுரஅடியில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து பொதுக்குழு கூட்டத்தை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மழை பெய்தாலும் கூட, தடையின்றி கூட்டத்தை நடத்துவதற்காக மரப்பலகையால் ஒரு அடி உயரத்துக்கு தரைதளம் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version