திமுக ஆட்சிக் காலத்தில் பாடநூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கமா என்ற கேள்விக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
2021-22ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயராகவும், சான்றோர் வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் பாட நூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
”தமிழ் அறிஞர்களின் பெயர்களில் சாதி நீக்கப்பட்ட செய்தியை அறிந்து, ஒவ்வொரு பாடநூலாக நான் எடுத்து ஆய்வு செய்து பார்த்தேன். அதில் ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்னும் கவிஞரின் பெயர் நாமக்கல் ராமலிங்கனார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல பன்னிரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உ.வே.சாமிநாத ஐயர் என்னும் பெயர் உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற பெயர் மனோன்மணியம் சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் புத்தகத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டு மாற்றப்பட்டது. அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். பாடநூல் கழகத்தின் தலைவராக வளர்மதி இருந்தார். அவர்களின் காலகட்டத்தில் எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதனால் இது புதிய செய்தி அல்ல. மேலும் இது திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்ததுபோலத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் உண்மை அல்ல.
மாறுதல் தொடருமா?
இந்த மாறுதல் தொடருமா அல்லது தலைவர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர் மீண்டும் சேர்க்கப்படுமா என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் முடிவெடுப்பர். இதுகுறித்துக் கல்வியாளர்களைச் சந்தித்து ஆலோசித்து, எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்து முடிவெடுப்பர்.
பின்னாட்களில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் முடிவெடுக்க வேண்டியது அரசின் கடமை. திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய குழப்பங்கள் இல்லாமல் பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும்”.
இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தெரிவித்தார்.