அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (நவ.23) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் சுய உதவிக் குழுக்களை சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட, நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும்.
தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிகளை வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும்“ உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை அமைச்சர் வெளியிட்டார்.