மாநிலங்கள் அதிகபட்ச சுயாட்சி உரிமை பெற்றிடவும், மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராயவும் தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இதுபோன்ற நடவடிக்கைகள் வெறுமனே அரசியல் மோதலாக அல்லாமல், அரசமைப்பின் அடிப்படையிலும் மக்களின் நலன் சார்ந்தும் அமைய வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110ஆவது விதியின் கீழ் உயர்மட்டக் குழு அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு எதிராக மாநிலச் சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டது, தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்காததால் ‘சமக்ர சிக் ஷா அபியான்’ திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது உள்ளிட்டவை குறித்தும் சுட்டிக்காட்டினார்.