சென்னை: திருப்பணிகளை முறையாக முடிக்காமல், அரசின் பெருமைக்காக அவசரகதியில் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவதா என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், “தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. (தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.)
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல கோயில்களில் திருப்பணிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரைகுறையாக பணிகள் செய்ததால் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு பல கோயில்கள் பழுதடைந்ததைப் பார்க்கிறோம். குறிப்பாக உலகப் புகழ் பெற்ற பழந முருகன் கோயிலில் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. இந்து முன்னணி அதனைக் கண்டித்தது.
சமீபத்தில் நடைபெற்ற பல கோயில் கும்பாபிஷேகங்களில் இதே பிரச்சினை தலை தூக்கியது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திலும் பிரச்சினை தலைதூக்கியது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கோயில் திருப்பணி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது ஆகும். எனவே பழம்பெரும் கோயில்களில் அதற்கு ஏற்ப திருப்பணிகள் செவ்வனே செய்யப்பட வேண்டும். பக்தர்கள் காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். அப்படி இருந்தும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர், அரசியல்வாதிகள் அதனை சுருட்டி ஊழல் செய்வதில் தங்களது திறமையைக் காட்டுகிறார்கள்.
தென்காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக செலவுத்திட்டமாக ஒரு கோடியே 67 லட்சத்து ஐம்பதாயிரம் (1,67,50,000) ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். இதில் பூமாலை ரூ. 15 லட்சம், குப்பை அள்ள சம்பளம் ரூ. 2.5 லட்சம், சிவாச்சியார், உபயதாரர் சாப்பாடு ரூ. 3 லட்சம் (அன்னதானம் தனி) என இஷ்டத்திற்கு கணக்கு காட்டுகிறார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் பணியில் அலட்சியத்தை சுட்டிக் காட்டிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கு ரூ. 300 கோடியில் கட்டப்பட்டு வரும் மண்டபம் அதன் தடுப்புச்சாரத்தை நீக்கியவுடன் விழுந்து விட்டது. இத்தகைய செயல்பாடுகள் வெளிப்பட்ட போதும் அரசோ, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவோ, அதிகாரிகளோ சிறிதும் வெட்கமின்றி அமைதி காக்கின்றனர்.
கும்பாபிஷேகம் தடை படுவது வேதனையானது. ஆனால் முறையான திருப்பணி முடிக்காமல் கும்பாபிஷேகம் செய்வது அநியாயமாகும். எனவே தமிழக முதல்வர் இத்தனை ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது என்று தற்பெருமை பேசுவதை விடுத்து, கோயில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.